‘மாஸ்டர்ஸ்’ பட்டம் வென்றவருக்கு ரூ. 2 கோடி பரிசு

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) அரைஇறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் டேனில் மெட்விடேவிடம் (ரஷ்யா) மோதினார். இதில், முதல் செட்டை ஸ்வெரேவ் கைப்பற்ற, அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்ட மெட்விடேவ் கடைசி இரு செட்டை வசப்படுத்தினார்.

2 மணி 7 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில், மெட்விடேவ் 5-7, 6-4, 6-1 என்ற செட்டில் ஸ்வெரேவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற 4-வது ரஷ்ய வீரர் என்ற பெருமையை பெற்ற 24 வயதான மெட்விடேவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

2-வது இடம் பிடித்த ஸ்வெரேவ் ரூ.1¼ கோடி பரிசும், 600 தரவரிசை புள்ளிகளும் பெற்றார்.