100-வது போட்டி விளையாடிய பெருமையை பெறவுள்ள விராட் கோலி… சதம் அடிப்பாரா?

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில், விளையாடும் இந்திய வீரர் விராட் கோலி தனது 100-வது டி20 கிரிக்கெட் போட்டியை விளையாடுகிறார். இதுதவிர்த்து, இந்திய வரலாற்றில் அனைத்து நிலைகளிலும் 100-வது போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி நாளை பெறுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 2008-ம் ஆண்டு விளையாட தொடங்கிய கோலி பல ஏற்ற, இறக்கங்களுடன் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை அவர் விளையாடியுள்ள 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3,308 ரன்களை குவித்து உள்ளார். பேட்டிங் சராசரி 50.12 ஆக வைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 30 அரை சதங்களை அடித்துள்ள கோலியின் உச்சபட்ச ஸ்கோர் 94 ஆக உள்ளது. 50 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அவற்றில் 30 போட்டிகளில் இந்திய அணி வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. 2 போட்டிகள் டை ஆகியுள்ளன. 2 போட்டிகளில் முடிவுகள் வெளியாகவில்லை. கேப்டனாக கோலியின் வெற்றி சராசரி 64.58 ஆக உள்ளது. சர்வதேச அளவில் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துள்ளன. அதனால், பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய போட்டியில் சதம் அடித்து ரசிர்களின் ஆவலை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.