டோக்கியோ ஒலிம்பிக்: அன்னு ராணி தோல்வி

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (வயது 28) முதல் முயற்சியில் 50.35 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார்.

இதனால் 9வது இடம் பிடித்த அவர், 2வது முயற்சியில் 53.19 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார். எனினும், 2வது முயற்சியில் பலரும் இந்த இலக்கை கடந்திருந்தனர். இதனால், 14வது இடத்திற்கு ராணி தள்ளப்பட்டார். அதன்பின் 3வது மற்றும் இறுதி முயற்சியில் 54.04 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 14வது இடம் பெற்றார். முதல் 12 இடங்களில் வருபவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாக கூடிய சூழலில், ராணி தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறி உள்ளார்.

போலந்து நாட்டின் மரியா ஆண்டிரெஜைக் 65.24 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 24வது பெடரேசன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளில், அன்னு ராணி 63.24 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.