இன்று, மதுரையிலிருந்து 6 விமானங்கள் இயக்கம்

கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவை, நேற்று முன்தினம் தொடங்கியது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 10 விமான சேவைகள் நடைபெற்றது.

ஆனால் நேற்று பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவு இல்லாததால் பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி ஆகிய பகுதிகளுக்கு இயக்க திட்டமிட்டிருந்த தனியார் விமானம் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் என 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மதுரை-சென்னை இடையே 4 விமான சேவைகள் மட்டும் வழக்கம்போல் நடைபெற்றது. இன்று மதுரையில் இருந்து 6 விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து, இன்று காலை 11 மணிக்கு மதுரைக்கும், இங்கிருந்து சென்னைக்கும் தனியார் விமானம் இயக்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், 1.30 மணிக்கு இங்கிருந்து பெங்களூருக்கும் தனியார் விமானம் இயக்கப்படுகிறது.

இதேபோல், ஏர் இந்தியா விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். மாலை 4.30 மணிக்கு அந்த விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டு, டெல்லி சென்றடையும்.

பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், குறைந்த அளவே விமான சேவைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.