இதனால், சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..?

1) ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக, 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது.

2) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுமா.? என்ற கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, ‘மத்திய அரசு வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து இருக்கிறது. ஆகவே நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்’ என தெரிவித்தார்.

3) மாநில வாரியாக, அதிகபட்சமாக மராட்டியத்தில்  423- பேருக்கும் தமிழகத்தில் 411 -பேருக்கும், டெல்லியில் -386 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

4) மேலும், இந்தியாவில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2547-ல் இருந்து 2,902- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 62-ல் இருந்து 68 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 163-ல் இருந்து 184 ஆக உயர்ந்துள்ளது.

5) அமெரிக்கா – 2.77 லட்சம், இத்தாலி – 1.19 லட்சம், ஸ்பெயின் – 1.19 லட்சம், ஜெர்மனி – 91,159, பிரான்ஸ் – 64,338,ஈரான் – 53,183, பிரிட்டன் – 38,168, பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

6) தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை, உலக அளவில் 10.98 லட்சமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 59,160 பேர் பலியாகியுள்ளனர். 228,923 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

7) கொரோனாவின் வீரியத்தை சிலர் புரிந்துகொள்ளாமல், தேவையில்லாமல் வெளியே சுற்றுகின்றனர். இதனால் ஊரடங்கை கடுமையாக்கும் நிலை ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8) இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல், 21 ஆம் தேதி வரை 17-வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9) காணொலிக் காட்சி வழியாக, மாநிலங்களின் கவர்னர்களுடன் நேற்று ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில்,கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் முன்மாதிரியுடனும், ஒழுக்கமுடனும், ஒற்றுமையுடனும் இருப்பதாக பாராட்டிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அதே நேரத்தில் டெல்லி ஆனந்த் விகார் மற்றும் நிஜாமுதீன் சம்பவங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில், ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக  வருத்தம் தெரிவித்தார்.

10) இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு, ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.