இதுதான், எனது முதலும் கடைசியுமான எச்சரிக்கை : அஸ்வின் கோபம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது. இந்த போட்டியின்போது, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட் செய்கையில், அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், எதிர்முனையில் நின்றபோது அஸ்வின் பந்து வீசினார்.

அஸ்வின் பந்தை வீசுவதற்கு முன்பாகவே, பிஞ்ச் கிரீசை விட்டு வெளியேறிவிட்டார்.

அப்போது அஸ்வின் ‘மன்கட்’ முறையில் பிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தாா். பிறகு கிரிஸூக்குள் நிற்கும்படி பிஞ்சை நடுவர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ஆரோன் பிஞ்சை மன்கட் முறையில் ரன் அவுட் செய்யாதது குறித்து டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது:

’இதுதான், இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம்.

மேலும், நானும் பிஞ்சும் நல்ல நண்பர்கள்’ என்று கூறி,

இந்த டுவிட்டை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கும் டேக் செய்திருந்தார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில், மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா்.

கடந்த வருட ஐபிஎல் போட்டி தொடரில், பஞ்சாப் அணிக்காக ஆடிய அஸ்வின், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி ஆட்டமிழக்கச் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.