வெண்கலத்தை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்த வரலாற்று வெற்றி ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த நமது தேசத்தின் ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை கைப்பற்றியுள்ளனர். நமது ஹாக்கி அணியால் தேசம் பெருமை கொள்கிறது’ என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இந்திய ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம் என ஒலிம்பிக்ஸ் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து’ என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.