இந்திய அணிக்கு 165 ரன்கள் இலக்கு

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தற்போது முதலில் பேட்டிங் செய்தது.
முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணிக்கு சோதனை காத்திருந்தது. இந்திய பவுலர் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர்(0) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய், டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்தார்.
யுஸ்வேந்திர சாஹல் வீசிய 9வது ஓவரில் மலான்(24 ரன்கள்) எல்.பி.டபில்யூ. ஆனதில் இந்த ஜோடியும் பிரிந்தது. இதனை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஜாசன் ராய்(46 ரன்கள்), ஜானி பேர்ஸ்டோ(20 ரன்கள்) இருவரும் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் இயன் மார்கன் 28 ரன்களுடன் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். மீண்டும் தாக்கூரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ்(24 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாசன் ராய் 46 ரன்கள் அடித்துள்ளார். சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.