கோப்பை போச்சே..! : விராட் கோலி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்பினார்.
‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். இந்த முறையும் இந்தியாவுக்கு தொடக்கம் மோசமாகவே அமைந்தது.

ஏமாற்றமாக அமைந்த ஆட்டம் :

மயங்க் அகர்வால் (1 ரன்), கைல் ஜாமிசன் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் ஏமாற்றம் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஹாமிஷ் பென்னட் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்து எழும்பி வந்தபோது அதை ஆப்-சைடில் கோலி (9 ரன்) அடிக்க, ‘தேர்டுமேன்’ திசையில் நின்ற ஜாமிசன் கேட்ச் செய்தார்.
இந்த நியூசிலாந்து பயணத்தில் கோலி முதல்முறையாக ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினார்.3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கினார். மறுமுனையில் பென்னட்டுவின் ஒரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டி அட்டகாசப்படுத்திய பிரித்வி ஷா, தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை ரன்-அவுட்டில் பறிகொடுத்தார்.
அசத்திய ராகுல் :
பிரித்வி ஷா 40 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 62 ரன்களுடன் (12.1 ஓவர்) தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த சூழலில் ஸ்ரேயாஸ் அய்யருடன், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் கைகோர்த்தார். அவசரம் காட்டாமல் பொறுப்புடன் விளையாடிய இவர்கள் அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்தனர். இந்தியா 20-வது ஓவரில் 100 ரன்களை தொட்டது.

பந்தை அவ்வப்போது பவுண்டரிக்கு அனுப்பிய இந்த ஜோடி ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தியது. ஸ்கோர் 162 ரன்களை எட்டியபோது ஸ்ரேயாஸ் அய்யர் (62 ரன், 63 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். ராகுல்-ஸ்ரேயாஸ் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் திரட்டியது கவனிக்கத்தக்கது.

பின்னர், 297 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் அதிரடியாக மட்டையை சுழட்டினர்.

300 ரன்கள் :

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 223 ரன்களுடன் தடுமாற்றத்திற்கு உள்ளானது. கடைசி 10 ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கு 74 ரன் தேவைப்பட்டதால் இந்தியாவுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆனால் 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் டாம் லாதமும், காலின் டி கிரான்ட்ஹோமும் இணைந்து இந்தியாவின் உத்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

கிரான்ட்ஹோம், இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷர்துல் தாகூரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரியும், ஒரு சிக்சரும் தெறிக்க விட்டார். அவரது வாணவேடிக்கையால் ஆட்டம் அவர்கள் பக்கம் திரும்பியது. 21 பந்துகளில் 50 ரன்களை கடந்த கிரான்ட்ஹோம் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்தில் அரைசதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிரான்ட்ஹோம் 58 ரன்களுடனும் (28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), லாதம் 32 ரன்களுடனும் (34 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

விராட் கோலி ஒப்புதல் :

இதுபற்றி விராட் கோலி கூறுகையில், ‘மூன்று போட்டிகளிலும் எங்களது பீல்டிங், பவுலிங் சர்வதேச தரத்துக்கு அமையவில்லை. டுவென்டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட்டோம். ஒருநாள் தொடர் புதிய வீரர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். நியூசிலாந்து வீரர்கள் கோப்பை வெல்ல தகுதி வாய்ந்தவர்கள்’  என்றார், வடை போச்சே.. என்பதுபோல..!

அடுத்து, இந்தியா-நியூசிலாந்து இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. பார்க்கலாம்..