மும்பை அணிக்கு நன்றி: விராட்கோலி நெகிழ்ச்சி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி ஜெயித்திருந்தால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால் டெல்லி தோல்வி கண்டதால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பிளே-ஆப் அதிர்ஷ்டம் கிட்டியது. இந்த ஆட்டத்தை திரில்லிங்கோடு பார்த்துக் கொண்டு இருந்த பெங்களூரு வீரர்கள் மும்பை வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து கொண்டாடினர். இது குறித்து பெங்களூரு வீரர் விராட் கோலி கூறுகையில், ‘இது நம்ப முடியாத ஒன்று. நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பை அணிக்கு நன்றி. இந்த ஆட்டத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்போம்’ என்றார். பெங்களூரு அணி அடுத்து வெளியேற்றுதல் சுற்றில் 25-ந்தேதி லக்னோவை சந்திக்கிறது.