தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி

தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் ‘எப்’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப்பை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 6-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இந்த போட்டியில் தமிழக அணி தரப்பில் சந்தியா 3 கோலும், பிரியதர்ஷினி, துர்கா, கவுசல்யா தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி 2 வெற்றியுடன் கால்இறுதிக்கு தகுதி பெற்றது.