டி20 உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. 16 அணிகள் பங்கேற்கும் 7வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வருகிற அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்தது.

இதில் குரூப்1-ல் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்2-ல் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. இரு அணிகளும் லீக் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த உள்ளன.