சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஜம்மு – காஷ்மீர் அணியில் அதிவேக எக்ஸ்பிரஸ்

ஐபிஎல் போட்டியில் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் பெற்ற இளம் வீரர் உம்ரான் மாலிக், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு – காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22ல் நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த 21 வயது உம்ரான் மாலிக்.

இவர், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 2வது அதிவேகப் பந்துவீச்சு அதுதான். (முதல் இடம் ஃபெர்குசனுக்கு – 153.63 கி.மீ.) கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார் உம்ரான் மாலிக். முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே 151.03 கி.மீ வேகத்துக்குப் பந்துவீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 2வது ஆட்டத்தில் இன்னும் அதிகவேகமாகப் பந்துவீசி, ஐபிஎல் 2021 போட்டியில் வேகமாகப் பந்துவீசிய வீரர்களில் ஒருவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஐபிஎல் 2021 போட்டியின் அதிவேகப் பந்துவீச்சுப் பட்டியலில் முதல் 8 இடங்களில் 4 இடங்களை உம்ரான் மாலிக் பிடித்தார். 3 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு – காஷ்மீர் அணியில் சன்ரைசர்ஸ் வீரர்களான அப்துல் சமத்தும் உம்ரான் மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக அப்துல் சமத் தேர்வாகியுள்ளார். உம்ரான் மாலிக், ஜம்மு – காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளதால் அவருடைய பந்துவீச்சு உள்ளூர் போட்டியில் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கவுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தற்போது செயல்பட்டு வருகிறார்.