அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் சூரியா

நடிகர் சூரியாவால் எனது மகன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் நடிகராக அறிமூகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குனர் சரோவ் ஷண்முகம் இயக்குகிறார். அந்த படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று துவங்கியது. பூஜையில் அருண் விஜயின் தந்தை விஜயகுமார், அருண் விஜய், அவருடைய மகன் ஆர்னவ் விஜய் ஆகியோருடன் நடிகர் சூரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

சூர்யா தயாரிக்கும் இந்த படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதை சிறுவனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசத்தை குறிப்பிடுகிறது. இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஊட்டியில் நடக்கவிருக்கிறது.

இது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் எல்லாருடைய ஆசீர்வாதங்களுடனும், எனது மகன் ஆர்னவ் விஜய் இன்று நடிகராக அறிமுகமாகிறார் என்று அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! நடிகர் சூரியாவால் அவன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தலைமுறைகளுக்குப் பிறகு தொடரும் இந்த நட்புறவை வேறு எங்கும் கேட்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.