இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை வீரர் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் சாய்த்தார். இந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாடினாலும், சிறப்பாக விளையாடிய தனஞ்செயா டி சில்வா 155 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.