முதல் சுற்றிலேயே சாய்னா நேவால் தோல்வி

சாய்னா நேவால்

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார். அந்த சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை சந்தித்த சாய்னா, 16-21, 14-21 என்ற செட்களில் வீழ்ந்தார். 2வது நாளான புதன்கிழமை ஆட்டங்களில் இந்திய போட்டியாளா்கள் பெரும்பாலானோர் தோல்வியை தழுவினா். மகளிர் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 17-21, 13-21 என்ற செட்களில் தென் கொரியாவின் சோஹீ லீ/சியுங்சான் சின் ஜோடியிடம் தோற்றது. மற்றொரு இந்திய ஜோடியான மேக்னா ஜகம்புடி/பூா்விஷா ராமும் 8-21, 7-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் நிடா வியோலினா மார்வா/புத்ரி சியாய்கா இணையிடம் தோல்வி கண்டது.

கலப்பு இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா ஜோடி 17-21, 21-14, 11-21 என்ற செட்களில் சீனாவின் யான் ஸி ஃபெங்/யு டு இணையால் தோற்கடிக்கப்பட்டது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் இளம் இந்தியரான லக்ஷயா சென் 21-9, 21-7 என்ற செட்களில் சக இந்தியரான சௌரவ் வா்மாவை வென்றார். அதே பிரிவின் இதர ஆட்டங்களில் ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 19-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியால் வீழ்த்தப்பட்டார். காயஷ்யப், சீன தைபே வீரரான டியென் சென் சௌவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.