“ஓய்வு பெறும் முடிவு எளிதானது அல்ல..” – இயான் மோர்கன்

இங்கிலாந்து ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். தனது ஓய்வு அறிவிப்பு குறித்து 35 வயதான இயான் மோர்கன் கூறியதாவது;- “மிகவும் கவனமாக ஆலோசித்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளேன். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என்று நம்புகிறேன். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அணிக்கு செய்துள்ள சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். சில சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவங்கள் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும். இரண்டு உலக கோப்பையை வென்ற (2010-ம் ஆண்டு 20 ஓவர் மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை) அணியில் இடம் பெற்றதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஆனால் வருங்கால வெள்ளை நிறபந்து போட்டிக்கான (20 ஓவர் மற்றும் ஒரு நாள்) இங்கிலாந்து அணி முன்பு எப்போதும் இருந்ததை விட இன்னும் வலுவாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இயான் மோர்கன் இதுவரை 248 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 47 அரைசதம் உள்பட 7,701 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 115 ஆட்டங்களில் ஆடி 14 அரைசதம் உள்பட 2,458 ரன்களும் எடுத்துள்ளார். இது தவிர 16 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.