பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி

Close-up photo of a cricket ball hitting the stumps and knocking off the bails.

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் குறித்து தனியார் டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் ‘இயல்பான மனநிலையில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி வலுவாக மீண்டு வருவார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து விட்டால் போதும். எஞ்சிய ஆட்டங்களுக்கு விமர்சகர்களின் வாயை அடைந்து விடுவார். கடந்த காலத்தில் நடந்தது முடிந்த போன விஷயம். பெரிய ஆட்டக்காரரான அவர் உரிய நேரத்தில் பார்முக்கு வந்து விடுவார். பணிச்சுமையில் இருந்து விடுபட வீரர்களுக்கு ஓய்வு தேவை. மோசமாக விளையாடும் தருணத்தை எதிர்கொள்ளாத வீரர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது’ என்றார். ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.