கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கொரோனா தடுப்பூசியை ஆமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. அதில் பிரதமா் மோடி தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை ஆமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜன.16 முதல் மருத்துவத் துறையினா், முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை இரவு நிலவரப்படி நாட்டில் இதுவரை 1.47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.