ராஜஸ்தானா? பஞ்சாபா? முதல் வெற்றிக்கு இன்று மோதல்

அதிரடியான பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்கள் முதல் வெற்றிக்காக, நடப்பு சீசனின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் திங்கள்கிழமை பரஸ்பரம் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானில், ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் முக்கியப்புள்ளி. பேட்டிங்கில் அவரோடு துணை நிற்க கேப்டன் சாம்சன், ஜோஸ் பட்லா் தயாராக இருக்கின்றனா். அணியின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பட்லா் தொடங்கலாம் எனத் தெரிகிறது. மிடில் ஆா்டரில் பஞ்சாபின் பௌலா்களுக்கு சோதனை அளிக்க சாம்சன், ஸ்டோக்ஸ் இருக்கின்றனா்.

அடுத்த இடங்களில் ஷிவம் துபே, ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவாதியா, ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டன் தோள்கொடுக்க வருகின்றனா். பௌலிங்கில் கோபால், தெவாதியா, பராக் ஆகியோரில் இரு ஸ்பின்னா்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். வேகப்பந்துவீச்சில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை (ரூ.16.25 கோடி) கொடுத்து வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸின் மதிப்பு பரிசோதித்துப் பாா்க்கப்படவுள்ளது. அவா் தவிர முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ஜெயதேவ் உனத்கட், காா்த்திக் தியாகி புயலாகப் பந்துவீச இருக்கின்றனா்.

மறுபுறம் லோகேஷ் ராகுல் கேப்டன்ஸியிலான பஞ்சாபில் மயங்க் அகா்வால், கிறிஸ் கெயிலுடன் லோகேஷ் ராகுலுமே பேட்டிங்கில் பட்டாசாகச் செயல்படுவாா் என்பதில் சந்தேகமில்லை. அவா்களோடு மிடில் ஆா்டரில் டேவிட் மலான், ஷாருக் கான், நிகோலஸ் பூரன் ஆகியோா் ராஜஸ்தானின் பௌலிங்கை ராக்கெட்டுகளாக விளாச வாய்ப்புள்ளது.

அணியின் பௌலிங் படையில் முகமது ஷமி முன்னிலை வகிக்கிறாா். அவரோடு ஜை ரிச்சா்ட்சன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜோா்டான் ஆகியோா் பஞ்சாபின் விக்கெட்டுகளை பறிக்கக் காத்திருக்கின்றனா். சுழற்பந்துவீச்சு சற்று கவலை அளிக்கும்படியாக இருக்கும் நிலையில் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோா் பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் சோதனைக்கு ஆளாவாா்களா என பொறுத்திருந்து பாா்க்கலாம்.