பந்துவீச்சில் முன்னேற்றம் அவசியம்-மிதாலி ராஜ்

இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மெக்காயில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா (8 ரன்), ஸ்மிர்தி மந்தனா (16 ரன்) சொதப்பிய நிலையில் கேப்டன் மிதாலிராஜ் (63 ரன், 107 பந்து, 3 பவுண்டரி) அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினார். அவர் தொடர்ச்சியாக அடித்த 5-வது அரைசதம் இதுவாகும்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
சர்வதேச பெண்கள் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக சுவைத்த 25-வது வெற்றி இதுவாகும். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஒருநாள் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் ஆஸ்திரேலியாவின் சாதனைப்பயணம் நீள்கிறது. தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில் ‘நாங்கள் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். எங்களது சுழற்பந்து வீச்சை எல்லோரும் அடித்து விளையாடுகிறார்கள். எனவே சுழற்பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்’ என்றார்.