அன்று கர்ப்பிணி யானை; இன்று 3 வயது நாயின் பரிதாபம்.!

சமீபத்தில், கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று, வெடிபொருள் வைத்துக் கொடுக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள், கேரளாவில் மற்றொரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன், திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு போன் வந்துள்ளது. அதில், ’ஒல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்றின்  வாயில், யாரோ டேப் ஓட்டி விட்டுள்ளதால், அதனால் தண்ணீர் குடிக்கக் கூட வாய் திறக்க முடியாமல் சிரமப்படுவதாகவும்’ கூறப்பட்டது.

விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள், அந்த நாயை தேடி அலைந்தனர். பல நாள்கள் கழித்து, சுமார் மூன்று வயதுடைய அந்த நாய், கடைசியாக திரிச்சூரில் உள்ள, ஒல்லூர் சந்திப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அதை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நாயின் வாயை சுற்றி பல அடுக்குகளாக, பலமாக டேப் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், நாயால் வாயை திறக்க முடியவில்லை. உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது.

டேப் அழுத்தி ஒட்டப்பட்டதால், அதன் நாசி எழும்புகள் முறிந்து போயுள்ளன. வாயின் மேல் தோல் பகுதியிலும், ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.  விலங்குகள் நல அமைப்பினர், நாயை மீட்டு அதன் வாயிலிருந்த டேப்பை கழற்றினர்.

வாயிலிருந்த டேப்பை கழற்றியதும், சுமார் 2 லிட்டர் தண்ணீரை, அந்த நாய் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமச்சந்திரன் கூறுகையில்,

‘உணவு, தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில வாரங்கள் வாழமுடியும். தற்போது, கால்நடை மருத்துவமனையில், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து விலங்குகளை துன்புறுத்தாதீர்கள் ” என கூறினார்.