ஒலிம்பிக் மல்யுத்தம்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் சோனம் மாலிக்

மல்யுத்தத்தில் மகளிருக்கான 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் தனது முதல் சுற்றிலேயே தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக்காகும். அந்தச் சுற்றில் மங்கோலியாவின் போலோர்துயா குரெல்குவை எதிர்கொண்ட சோனம், தடுப்பாட்டத்தையே அதிகமாக வெளிப்படுத்தினார். முதல் ஒன்றரை நிமிஷங்கள் வரை இருவரும் தனக்கான ஸ்திரமான நிலையை எட்ட முயற்சித்ததால் பெரிய நகா்வுகள் ஏதும் ஏற்படவில்லை.

பின்னா் சோனம் தனது முதல் நகா்வு மூலம் ஒரு புள்ளியை பெற்று, 3 நிமிஷங்கள் வரை அவ்வாறு நீடித்தார். பின்னா் முன்னிலையை 2-0 என அதிகரித்தார். ஆனால், சுற்று முடிவடைய 35 விநாடிகளே இருந்த நிலையில் குரெல்கு அதிரடியான நகா்வு மூலம் சோனத்தின் கால்களை விடாமல் பிடித்து அவரை வீழ்த்தி 2 புள்ளிகள் பெற்றார். சுற்று முடிவுக்குப் பிறகும் புள்ளிகள் 2-2 என சமநிலையிலேயே இருந்தன. எனினும், கடைசி நேரத்தில் தனது அதிரடியான நகா்வு மூலம் புள்ளிகளை பெற்றதன் அடிப்படையில் குரெல்கு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். குரெல்குவைவிட சோனம் சிறந்த வீராங்கனைதான். ஆனால் தடுப்பாட்டத்தை அதிகமாக ஆடி தவறு செய்துவிட்டார். எனினும், மிகப்பெரிய போட்டியின் அனுபவம் அவருக்கு கிடைத்துள்ளது என்றார் சோனத்தின் பயிற்சியாளா் அஜ்மீா் மாலிக்.