இறுதிச்சுற்றிலும் சிறப்பான இலக்கை அடைய முயல வேண்டும் -நீரஜ் சோப்ரா

ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

15 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவு தகுதிச்சுற்றில் அவரே முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. தங்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளவரும், 2017ல் உலக சாம்பியன்ஷிப் வென்றவருமான ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்னஸ் வெட்டரை விட 1.01 மீட்டர் தூரம் அதிகமாக எறிந்துள்ளார் நீரஜ். எனவே, இறுதிச்சுற்றிலும் அவர் பதக்கம் வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

தகுதிச்சுற்று நிறைவுக்குப் பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, ‘எனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உணர்வு மிக நன்றாக இருக்கிறது. வார்ம்-அப்பின்போது எனது முயற்சிகள் திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. ஆனால், தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே சிறப்பான இலக்கை எட்டியுள்ளேன். ஆனால் இறுதிச்சுற்று முற்றிலும் வேறான சூழலாக இருக்கும். உலகின் சிறந்த வீரர்கள் அங்கு பதக்கம் வெல்வதற்கான முயற்சியில் இருப்பார்கள். உடல் ரீதியாக நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், மனோரீதியாக இன்னும் தயாராக வேண்டியுள்ளது. எனது முயற்சியில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தகுதிச்சுற்றில் செயல்பட்டதைப் போலவே, இறுதிச்சுற்றிலும் சிறப்பான இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்’ என்றார்.