தேசிய விளையாட்டு விருது! ஜூன் 3 கடைசித் தேதி!

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினர் ஜூன் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்- வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கும் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பம் உள்ள நபர்கள் அடுத்த மாதம் (ஜூன்) 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த முறை தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது ஒரிஜினல் விண்ணப்ப படிவத்தை அனுப்பிவைக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெயரை பரிந்துரை செய்யும் சம்மேளனங்களின் கையெழுத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை (நகல்) இ-மெயில் மூலம் கடைசி நாளான ஜூன் 3ம் தேதிக்குள் அனுப்பினால் போதும். கடைசி நாளுக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகள் விருதுக்கான தேர்வில் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும். ஊக்க மருந்து சோதனையில் சிக்கி தண்டனை பெற்றவர்கள் மற்றும் ஊக்கமருந்து விசாரணை நிலுவையில் இருக்கும் நபர்கள் இந்த விருதுக்கு தகுதி படைத்தவர்கள் கிடையாது’ என அதில் கூறப்பட்டுள்ளது.