முதல் டெஸ்ட்டில் ஆடாத மயங்க் அகர்வால்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை (புதன்கிழமை) நாட்டிங்காமில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இது 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடர் என்பதால் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் காயமடைந்துள்ளார். நேற்று பயிற்சியின்போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பவுன்சராக வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக பதம் பார்த்தது. பந்து தாக்கிய வேகத்தில் தலைக்குள் அதிர்வு இருப்பதாக உணர்ந்ததால், அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் தாக்கம் இருப்பதால் முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் ஆடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.