கொரோனாவால் 3 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவரும் போதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக அமெரிக்காவில் வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 1 கோடியே 69 லட்சத்து 42 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 8 ஆயிரத்து 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, 40 வினாடிக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தான் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. 10 மாதத்திற்குள் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிகழ்வு அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.