இந்த விஷயத்தில் சச்சினைவிட கோலியே பெஸ்ட்! – டிவில்லியர்ஸ்

ரன் இலக்கை விரட்டிப்பிடிப்பதில் தெண்டுல்கரைவிட கோலியே சிறந்தவர் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலில், ‘எங்கள் இருவருக்கும் (கோலி, டிவில்லியர்ஸ்) முன்மாதிரி இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்தான். தான் விளையாடிய காலத்தில் மெச்சத்தகுந்த வீரராக ஜொலித்தார்.

டி வில்லியர்ஸ்

அவரது சாதனையும், நளினமான பேட்டிங்கும், செயல்பாடும் அவரை பின்பற்றும் இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணங்கள். கோலியும் இதைத்தான் சொல்வார். ஆனால் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடிப்பதில் (சேசிங்) விராட் கோலியே கில்லாடி என்பது எனது தனிப்பட்ட கருத்து. அனைத்து வகையிலான போட்டிகளிலும், எல்லாவிதமான சூழலிலும் தெண்டுல்கரின் ஆட்டம் வியப்புக்குரியதுதான். ஆனால் நெருக்கடிக்கு இடையே ‘சேசிங்’ செய்வதில் தெண்டுல்கரை விட கோலியே முன்னணியில் உள்ளார். இந்த வகையில் கோலியை மிஞ்சுவது கடினம். கோலி களத்தில் நிற்கும்போது எதிரணிக்கு எந்த இலக்கும் பாதுகாப்பானது கிடையாது. எதிரணி 330 ரன்களுக்கு மேல் குவித்தாலும், கோலி அந்த இலக்கை விரட்டிப்பிடித்து விடுவார்’ என்றார்.