கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா நியமனம்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டத்தில் ஜெய் ஷா தலைவராக தேர்வாகியுள்ளார். இதன் மூலம் மிக இளம் வயது தலைவர் என்ற சிறப்பையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு வயது 32.

“இந்த பொறுப்புக்கு நான் தகுதியானவர் என்று கருதி எனது பெயரை பரிந்துரைத்த சக பிசிசிஐ உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஒழுங்கமைக்கவும், அபிவிருத்தி செய்யவும், ஊக்குவிக்கவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சீராக வளர்ச்சியடைந்துள்ளது. பெரிய நாடுகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்து வருகிறது இந்த கவுன்சில். ஒரு முழுமையான வளர்ச்சி இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த கவுன்சிலின் முக்கிய பங்கு வகிக்கின்றன.