ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை – பெங்கால் ஆட்டம் டிரா

11 அணிகள் இடையிலான 8வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சென்னையின் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. பந்து சென்னை அணியினர் பக்கமே (54 சதவீதம்) அதிகமாக சுற்றி வந்தது. சென்னை அணியினர் இலக்கை நோக்கி அதிகமான ஷாட்டுகளையும் அடித்தனர். ஆனாலும் பெங்கால் அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 3வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 வெற்றி, ஒரு டிரா என்று 7 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஈஸ்ட் பெங்கால் அணி 2 டிரா, 2 தோல்வி என்று 2 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- எப்.சி. கோவா (இரவு 7.30 மணி), பெங்களூரு-மும்பை சிட்டி (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.