ஐஎஸ்எல்: முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் – கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதல்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஏடிகே மோகன் பகான் – கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. 7வது ஐஎஸ்எல் கால்பந்து தொடா் வரும் நவம்பா் 20ம் தேதி தொடங்குகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவாவின் ஃபட்ரோடாவில் உள்ள ஜவஹா்லால் நேரு மைதானம், பாம்போலிம்மில் உள்ள ஜிஎம்சி தடகள மைதானம், வாஸ்கோவில் உள்ள திலக் மைதானம் ஆகிய 3 இடங்களில் ஐஎஸ்எல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ரசிகா்களுக்கு அனுமதியில்லை. இந்த சீசனில் 115 ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன. அதற்கான முதற்கட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பா் 20ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் – கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போதைய நிலையில் ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறும் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.