ஐபிஎல் தொடர் நடக்கிறது இனி ரொம்ப கஷ்டம் – ராஜஸ்தான் அணி

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால், பிசிசிஐ.,க்கு ஏறத்தாழ 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்பதால், ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் முழு முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது அவ்வளவு எளிதல்ல என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான மனோஜ் படேலே பேசுகையில், ‘ஐ.பி.எல். போட்டித் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் ஊடகங்களை நெருக்கமாக பின் தொடருகிறோம். போட்டியை நடத்த காலண்டரில் ஒரு இடத்தை கண்டுபிடிப்பதே சவால் என்று நினைக்கிறேன். வீரர்கள் ஏற்கனவே அதிக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனால் அனைத்து நாட்களிலும் சர்வதேச போட்டித்தொடர்கள் உள்ளன. குறிப்பாக கொரோனா வைரசுக்கு பிறகு இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் முடிந்தவரை பல போட்டிகளையும், பல டெஸ்ட் தொடர்களையும் நடத்த முயற்சிக்கின்றன. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சிறிய வாய்ப்பு உள்ளது. அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தவும் சில வாய்ப்பு இருக்கிறது. இது 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாகவோ அல்லது பிறகோ இருக்கலாம்’ என்றார்.