மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு : முதல்வர் தீவிரம்

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால், மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதில், சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதைத் திருப்பி அனுப்பினார். பின்னர், அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சட்ட முன்வடிவு தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். இட ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர, கால தாமதம் ஆவதால் கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஆதரித்த 7.5 % இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஒரு மாதமாகியும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தராததால், எப்போது ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,

’தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு, விரைவில் மருத்துவப் படிப்பு கிடைக்கும்.

7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்’ என்றார்.