ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை மனிஷா கல்யாண் பங்கேற்று சாதனை

ஐரோப்பிய பெண்கள் கால்பந்து கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி சைப்பிரஸ் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தொடக்க நாளில் நடந்த லீக் ஆட்டத்தில் அபாவ்லான் லேடிஸ் எப்.சி. (சைபிரஸ்) அணி 3-0 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை சேர்ந்த எஸ்.எப்.கே.ரிகா அணியை தோற்கடித்தது. இந்த போட்டிக்கான அபாவ்லான் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய இளம் வீராங்கனை மனிஷா கல்யாண் 60-வது நிமிடத்தில் மாற்று வீராங்கனையாக களம் கண்டார். இதன் மூலம் அவர் ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். பஞ்சாப்பை சேர்ந்த 20 வயதான மனிஷா கல்யாண் சைப்பிரஸ் நாட்டின் முதல்தர டிவிசன் போட்டியில் ஆடும் அவாப்லான் லேடிஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் வெளிநாட்டு கிளப் அணியில் ஒப்பந்தமான 4-வது இந்திய கால்பந்து வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கி இருந்தார். மனிஷா கல்யாண் இந்திய பெண்கள் அணிக்காகவும், இந்திய பெண்கள் லீக் போட்டியில் கோகுலம் கேரளா அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த பிரேசில் அணிக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மனிஷா கல்யாண் ஒரு கோல் அடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.