முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – ரஹானே

‘முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரராக யார் ஆடுவார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புஜாரா வழக்கம்போல் 3வது வரிசையிலேயே விளையாடுவார். தொடக்க ஜோடி யார் என்பதை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தினர் இணைந்து முடிவு செய்வார்கள். சிறிய காயப் பிரச்சினையால் பயிற்சி ஆட்டத்தில் நான் விளையாடவில்லை. இப்போது முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன். முதலாவது டெஸ்ட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நன்கு பயிற்சி செய்து சிறப்பாக தயாராகி இருக்கிறேன்’ என்றார்.

ஏற்கெனவே காயத்தால் சுப்மான் கில் தாயகம் திரும்பிய நிலையில் மயங்க் அகர்வாலும் இப்போது காயமடைந்திருப்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனேகமாக லோகேஷ் ராகுலுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.