வெயிலை சமாளிக்க கடைப்பிடிக்கவேண்டிய சில வழிகள்…!

வெயில் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தலைக்கு வெள்ளை நிறத்திலான தொப்பி அணிந்து கொள்ள வேண்டும் அல்லது பருத்தியால் ஆன ஒரு மிகப் பெரிய துண்டை எடுத்து, தலை மற்றும் பின் கழுத்து பகுதியை மறைக்கும் வகையில் கட்டிக்கொள்ள வேண்டும். இது தலை அதிகம் உஷ்ணமடையாமல் பாதுகாக்கும்.வெயில் காலங்களில் சிலர் வெளியில் நன்கு நடமாடி விட்டு வீட்டிற்கு வந்த உடனே குளிர் சாதன பெட்டியில் இருக்கும் குளிர்ந்த நீரை உடனே குடிக்கும் வாடிக்கை கொண்டிருக்கின்றனர். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற ஒரு செயலாகும். அதற்கு மாறாக மண்பானை தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும்.

கடுமையான வெயில் அடிக்கின்ற அக்னி நட்சத்திர காலத்தில் வியர்வை அதிகம் ஏற்படுவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. இது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இக்காலங்களில் அடிக்கடி பழங்கள் சாப்பிடுவது, சுத்தமான நீரை அடிக்கடி அருந்துவதன் மூலம் உடலில் எப்போதும் நீர் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

கோடைக்காலங்களில் காரம், புளிப்பு போன்றவை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளையும், மாமிச உணவுகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள், உணவுகளை கோடைகாலங்களில் அதிகம் சாப்பிட வேண்டும். சிலர் செய்யும் வேலை நிமித்தமாக இரவில் நெடுநேரம் கண் விழிக்கும் நிலை ஏற்படுகிறது.

கோடைக் காலங்களில் பகல் நேரத்தில் இருக்கும் வெப்பம் உடலை சூடு படுத்துவதோடு, இரவிலும் நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதால் உடல் மேலும் உஷ்ணமடைந்து பல நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே கோடை காலங்களில் சீக்கிரமாகத் தூங்கி, அதிகாலையில் எழுவது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.