தமிழக மக்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 163 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 15,298 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்துவந்த 43 பயணிகள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழக மக்கள் கடுமையாக பின்பற்றவேண்டும் :

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தற்போது கலிபோர்னியாவில் இருந்து வந்த போரூரை சேர்ந்த 74 வயது நபருக்கும், லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த கீழ்க்கட்டளையை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும், நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயது நபருக்கும், சைதாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண், லண்டனில் இருந்து வந்த 25 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதில், கலிபோர்னியாவில் இருந்து வந்தவரும், அமெரிக்கா, லண்டனில் இருந்து வந்த பெண்ணும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும், கீழ்க்கட்டளை மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், 25 வயது வாலிபர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், 65 வயது நபர் தனியார் ஆஸ்பத்திரியிலும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, இதுவரை ஆஸ்பத்திரிகளில் 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவையில்லாமல் முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை. தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியும் 21 நாட்கள் முழு ஊரடங்கை நாடு முழுவதும் அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இதுபோன்ற அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகளில், 3-வது மற்றும் 4-வது 15 நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 முதல் 20 மடங்கு வரையிலும் உயர்ந்திருக்கிறது.

இந்தநிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில், தமிழக அரசு மிக கவனமாக இருக்கிறது. முழு ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கடுமையாக பின்பற்றவேண்டும்.

 

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.