5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு : தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு, முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

என்னென்ன மாவட்டங்கள் :

தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில் அதிகரித்து உள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

அதன்படி சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணிவரை, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில், ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னென்ன பணிகள் இயங்கும்:

முழு ஊரடங்கு காலகட்டத்தில், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

இதர மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.

வைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு

அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து, வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும்.

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

என்னென்ன பணிகள் இயங்காது:

மேற்குறிப்பிடப்பட்ட பணிகளைத் தவிர, மற்ற பணிகளுக்கு அனுமதி கிடையாது. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

”மக்கள் விதிமுறைகளை பின்பற்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனவும் முதலமைச்சர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.