பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: டொமினிக் திம், ஜாபியர் அதிர்ச்சி தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. களிமண்தரை போட்டியான இதில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியரை (துனிசியா), தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள மேக்டா லினெட் (போலந்து) 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 2 மணி 28 நிமிடங்கள் நீடித்தது. மாட்ரிட் ஓபன் சாம்பியனான ஜாபியர் பிரெஞ்ச் ஓபனை வெல்லும் வாய்ப்பில் இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்தார். ஆனால் முதல் சுற்றிலேயே நடையை கட்டிவிட்டார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் கனேபியிடம் (எஸ்தோனியா) வீழ்ந்தார்.