பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி..!!

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். 2 முறை பிரெஞ்சு ஓபன் போட்டியில் இறுதி சுற்று வரை தகுதி பெற்றுள்ள திம் இன்று முதல் சுற்றில் பொலிவியாவின் ஹ்யூகோ டெலியனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஹ்யூகோ டெலியன் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமினிக் திம்-மை வீழ்த்தினார். முன்னணி வீரர் டோமினிக் திம் முதல் சுற்றிலே வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.