முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 375 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதம் அடித்தனர். பிஞ்ச் 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்மித்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி அவுட் செய்தார். ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். ஸ்மித் தனது 10 வது ஒருநாள் சதத்தை 62 பந்துகளில் அடைந்தார்.

பிஞ்ச் மற்றும் ஸ்மித் தவிர, க்ளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 76 பந்துகளில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், கடின இலக்குடன் இந்திய வீரர்கள் ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அகர்வால், ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.

பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா தவானுடன் இணைந்து அணியை நிமிர்த்துவதற்கு உதவினார். அவர், 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் பாண்டியா ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார் ஹர்திக் பாண்டியா. அதேபோல் தவானும் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த வீரர்களால் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இதனால், இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.