ஐ.பி.எல். களம்: டெல்லியை வீழ்த்துமா ராஜஸ்தான்?

இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லியை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இந்த சீசனில் பிரமாதமாக விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அத்துடன் நல்ல வலுவாகவும் உள்ளது.

7 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் வருகை புதுதெம்பை கொடுத்துள்ளது. அத்துடன் ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியபோது முன்னணி வீரர்கள் கைவிட்டு தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தானை பிரபலம் இல்லாத வீரர்களான ராகுல் திவேதியாவும் (45 ரன்), ரியான் பராக்கும் (42 ரன்) ஜோடியாக காப்பாற்றினர்.

இது ராஜஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவன் சுமித் பார்முக்கு திரும்பினால் ராஜஸ்தான் மேலும் வலுப்பெறும். ஏற்கெனவே சார்ஜாவில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. இங்குள்ள சூழலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.