ஜோகோவிச், ஆஷ்லி முன்னேற்றம்

இத்தாலி ஓபன் 2வது சுற்றில் முன்னனி வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற, முன்னனி வீரர் ஜோகோவிச், வீராங்கனை ஆஷ்லி பார்தி ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர், ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். அப்படி தகுதிப்பெற்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா( 2வது ரேங்க்), அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா(31வது ரேங்க்) ஆகியோர் மோதினர். டைபிரேக்கர் வரை நீண்ட முதல் சுற்றை ஜெசிகா 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார். தொடர்ந்து நடந்த 2வது சுற்றை 6-2 என்ற கணக்கில் ஜெசிகா எளிதில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 27 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில், ஒசாகா 0-2 என நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.சமீபகாலமாக ஒசாகா தோற்று வெளியேறுவது தொடர்கதையாகி உள்ளது. சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் 2வது சுற்றிலும், மியாமி ஓபனில் காலிறுதியிலும் ஒசாகா தோற்று வெளியேறினார். அதே நேரத்தில் ஜெசிகாவை போல் ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), பிளிஸ்கோவா(செக் குடியரசு), கோரி காஃப்(அமெரிக்கா), வேரா சவோனாரேவா(ரஷ்யா), எலினா(உக்ரைன்), கெர்பினி(ஸ்பெயின்) ஆகியோர் நேற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச்(செர்பியா), டொமினிக் தீம்(ஆஸ்திரியா), ரொபர்டோ பாடிஸ்டா(ஸ்பெயின்), பெலிக்ஸ் அகெர்(கனடா), ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா) ஆகியோர் 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.