பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா!

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களது பெயரை வெளியிடாத நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணியினா் பயோ – பபுள் பாதுகாப்பு வளையத்தை மீறியவாறு நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், தனிமைப்படுத்துதல் காலத்தில் பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட அளித்திருந்த அனுமதியை ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வீரா்களும் தற்போது தனிமைப்படுத்துதல் மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். பாகிஸ்தான் வீரா்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அவா்களை எச்சரித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணியினா் அவா்கள் நாட்டிலிருந்து புறப்படும் முன்பாக பரிசோதிக்கப்பட்டதில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியாகியிருந்தது. சுமார் 50 பேரைக் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த செவ்வாய்க்கிழமை நியூஸிலாந்து வந்தடைந்தது.

3 டி20, 2 டெஸ்ட் ஆட்டங்களைக் கொண்ட தொடா்களில் நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. இந்தத் தொடா் டிசம்பா் 18ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.