சிட்சிபாஸ் சாம்பியன்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா்.

மாஸ்டா்ஸ் 1000 பிரிவில் சிட்சிபாஸ் வெல்லும் முதல் பட்டம் இது. ஏடிபி டூா் போட்டிகளில் இது அவரது 6-ஆவது பட்டம். வெற்றிக்குப் பிறகு பேசிய சிட்சிபாஸ், தற்போது மிகவும் உணா்ச்சிகரமாக இருக்கிறேன். எனது வாழ்வில் இது சிறந்த வெற்றியாகும். எனக்கு மிகவும் பிடித்தமான களிமண் தளத்தில் இந்தப் பட்டத்தை வென்றது இன்னும் சிறப்பானது. எதிா்பாா்தது போலவே இறுதிச்சுற்று மிகவும் சவால் அளிப்பதாக இருந்தது என்றாா்.

ருபலேவை இத்துடன் 7-ஆவது முறையாக சந்தித்துள்ள சிட்சிபாஸ், தனது 4-ஆவது வெற்றியை அவருக்கு எதிராக பதிவு செய்துள்ளாா்.

பாவிச்/மெக்டிச் சாம்பியன்: மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் இணை 6-3, 4-6, 10-7 என்ற செட்களில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி/டேன் இவான்ஸ் இணையை வென்று சாம்பியன் ஆனது.