2025, 2029ல் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி: ஐசிசி அறிவிப்பு

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் டாப் 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025, 2029ல் மீண்டும் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு தொடங்கி 2031 வரை நடைபெற உள்ள ஐசிசி போட்டித் தொடர்களுக்கான அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. 2018ல் கைவிடப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடர் 2025, 2029ல் மீண்டும் நடத்தப்பட உள்ளது. இதில் உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. 2024, 2026, 2028, 2030ல் ஆண்கள் மற்றும் மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 2025, 2027, 2029, 2031ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் நடைபெறும். 2027, 2031ல் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடர்கள் நடக்க உள்ளன.

இவற்றில் தலா 14 அணிகள் களமிறங்கும். மகளிருக்கான டி20 உலக கோப்பை, டி20 சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் உலக கோப்பை தொடர்களுக்கான அட்டவணையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க, பிசிசிஐ-க்கு ஜூன் 28ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாமல், ஐக்கிய அரபு அமீரகத்துக்கி மாற்றப்பட்டாலும் போட்டியை நடத்தும் உரிமையை பிசிசிஐ தக்கவைத்துக்கொள்ளும்.