மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள்.!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல், 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை தவிர, பிற பகுதிகளில் நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

இந்நிலையில், பிளஸ்-2 வேதியியல் தேர்வில், தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தேர்வுத்துறை கூறியுள்ளதாவது:

’தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில், புரதம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து வழங்கியதால், மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் அந்த கேள்விக்குப் பதில் அளித்திருந்தாலே, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது