கோல்ப் வீரர்கள்: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை!

கோல்ப்பில் 3 பேருக்கு அர்ஜூனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்திய கோல்ப் வீரர் ரஷித்கான், வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்‌ஷா டாகர் ஆகியோரது பெயரை அர்ஜூனா விருதுக்கு இந்திய கோல்ப் யூனியன் பரிந்துரை செய்துள்ளது. கோல்ப் தரவரிசையில் 185-வது இடம் வகிக்கும் ரஷித்கான் இந்திய அளவில் சிறந்த தரவரிசையை கொண்டிருப்பவர் ஆவார். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான அதிதி அசோக், ஐரோப்பிய டூரில் மூன்று பட்டங்கள் வென்றுள்ளார். தற்போது கடும் சவால் நிறைந்த பெண்களுக்கான பி.ஜி.ஏ டூர் தொடரில் அமெரிக்காவில் விளையாடி வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 19 வயதான தீக்‌ஷா டாகர், கேட்கும் திறனில் குறைபாடு உடையவர். 2017-ம் ஆண்டு காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால், 1987-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜூனா விருது பெறும் முதல் கோல்ப் வீராங்கனை என்ற பெருமையை வசப்படுத்துவார்.