’அனைத்து விசாக்களும் ரத்தானது’ : மத்திய அரசு அதிரடி..!

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ், ஒரு தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் வைரஸ் தாக்குதலுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15-ந்தேதி வரை :

இது தொடர்பாக மத்திய அரசு சார்பில், வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிப்.,15 – க்கு பிறகு, இத்தாலி, ஈரான், சீனா, தென்கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் உட்பட அனைத்து சுற்றுலா பயணிகளும், கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும்.

அதேபோல், பொதுவாக விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் உட்பட அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் நாளை (மார்ச் 13) முதல் ஏப்ரல் 15-ம் தேதிவரை ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஐநா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதி  அளிக்கப்படும்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.