இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு அனுமதி

இங்கிலாந்தில் முதல் முறையாக நடைபெற இருக்கும் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

அதில் மூவா், டி20 அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டா் தீப்தி சா்மா என தெரியவந்துள்ள நிலையில், 4-ஆவது வீராங்கனை குறித்த தகவல் வெளியாகவில்லை.

தி ஹன்ட்ரட் போட்டி ஜூலை 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்து மகளிா் அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக ஜூன் மாதம் அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மகளிா் அணியில், இந்த 4 வீராங்கனைகள் மட்டும் அந்த புதிய போட்டியில் பங்கேற்பதற்காக தொடா்ந்து அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மகளிா் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் விளையாடுவதற்காக ஜூன்-ஜூலையில் இங்கிலாந்து செல்கிறது. இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளா் தோ்வு செய்யப்பட்ட பிறகு, இங்கிலாந்து பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

எனினும், இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகியதை அடுத்து, இந்திய பயணிகளுக்கு இங்கிலாந்து தற்போது தடை விதித்துள்ளது. இதனால், கிரிக்கெட் தொடருக்காக இந்திய மகளிா் அணி எவ்வாறு இங்கிலாந்து பயணிக்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.